மராட்டியத்தில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் மூலமும் பாஸ் பெறும் வசதி தொடக்கம்


மராட்டியத்தில் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய ஆன்லைன் மூலமும் பாஸ் பெறும் வசதி தொடக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2021 7:50 PM GMT (Updated: 2021-08-13T01:20:32+05:30)

மின்சார ரெயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலமும் பாஸ் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டவர்களுக்கு பாஸ்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் வருகிற 15-ந் தேதி முதல் பயணம் செய்யலாம் என அறிவித்தார். இதையடுத்து மின்சார ரெயிலில் பயணம் செய்ய தடுப்பூசி போட்டவர்களுக்கு பாஸ் கொடுக்கும் பணி நடந்து வருகிறது.இதில் நேரடியாக பாஸ் பெற விரும்பும் மக்கள், தடுப்பூசி போட்டதற்கான இறுதி சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வீட்டருகே உள்ள ரெயில் நிலையங்களில் பெற்று கொள்ள முடியும். அங்கு உள்ள மாநகராட்சி முகாம்களில் பொது மக்கள் ஆவணங்களை கொடுத்து பாசை பெற்று கொள்ளமுடியும். பாஸ் பெற 2-வது தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்து இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் பெறலாம்
இதேபோல பொது மக்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் பாஸ் பெறும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் பாஸ் பெற பொதுமக்கள் https://epassmsdma.mahait.org என்ற இணையதள முகவரிக்கு செல்லவேண்டும். அங்கு தடுப்பூசி போட பதிவு செய்த செல்போன் எண்ணை கொடுக்க வேண்டும். செல்போன் எண் கொடுத்தவுடன் அதற்கு ஓ.டி.பி. ஒன்று வரும். அந்த ஓ.டி.பி. கொடுத்தவுடன் பெயர், செல்போன் எண், பதிவு எண் உள்ளிட்ட தகவல்கள் திரையில் வரும்.அதன்பிறகு 'ஜெனரேட் பாஸ்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன் நமது பெயர் விவரம், முதல் மற்றும் 2-வது தடுப்பூசி போட்ட தகவல் உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படும். அதன்பிறகு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

48 மணி நேரத்தில்...
இது முடிந்த பிறகு 48 மணி நேரத்தில் லிங் ஒன்று வரும். அந்த லிங்கை கிளிக் செய்தால் அதில் இருந்து ஆன்லைன் பாசை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் அந்த ஆன்லைன் பாசை காண்பித்து டிக்கெட் கவுண்ட்டரில் ஒரு மாதம் பயணம் செய்வதற்கான மின்சார ரெயில் சீசன் டிக்கெட்டை பெற்று கொள்ளலாம். தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய ஒரு மாதத்திற்கான சீசன் டிக்கெட்டை மட்டுமே வாங்க முடியும். ஒரு வழிப்பயண டிக்கெட், குறுகிய கால சீசன் டிக்கெட்டுகளை வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story