கியாஸ் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்


கியாஸ் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 19 Aug 2021 1:39 AM GMT (Updated: 19 Aug 2021 1:39 AM GMT)

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் படும் துன்பத்தை கண்டு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி உள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு
மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு, சாமானிய மக்களை பற்றி கரிசனையின்றி, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.கடந்த ஜனவரி மாதம் ரூ.710-க்கு விற்பனையான ஒரு சமையல் கியாஸ் சிலிண்டரின் தற்போதைய விலை ரூ.875.50.இன்னொரு கொடுமை, வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் செய்கிறபோது, டெலிவரி செய்கிறவருக்கு குறைந்தது ரூ.50 டிப்ஸ் தர வேண்டியது எழுதப்படாத விதியாகி உள்ளது.

‘விலையை குறையுங்கள்’
இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டும் விதமாக டெல்லியில் நேற்று அந்த கட்சி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் காலி சிலிண்டரையும், விறகு அடுப்பையும் காட்சிப்படுத்தினர்.

அப்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினடே கூறியதாவது:-
சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.25 என்ற அளவுக்கு கடுமையாக உயர்த்தி உள்ளனர். டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.860. நாட்டின் பிற பகுதிகளில் ரூ.1,000-ஐ தொடுகிறது.எங்களது ஒரே கோரிக்கை, தயவு செய்து மக்களுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள். மக்கள் படும் துன்பத்தைக் கண்டு சிலிண்டர் விலையை குறையுங்கள். சிலிண்டர் விலையை உயர்த்தியது பெண்கள் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கை. சிலிண்டர் விலை உயர்வால் பெண்கள் மறுபடியும் விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

44 சதவீதம் விலை உயர்வு
அதிகார போதையில் இருக்கிற, உணர்ச்சியற்ற மத்திய அரசு கொஞ்சம் கவனம்செலுத்தி, மக்களுக்கு கொஞ்சம் (விலை உயர்விலிருந்து) ஓய்வு கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.சமையல் கியாஸ் விலையை நிர்ணயிக்கும் சவுதி அரம்கோவின்படி, சமையல் கியாஸ் விலை உண்மையில் ரூ.600 தான். ஆனால் நாம் ஏன் ரூ.260 அதிப்படியாக கொடுக்க வேண்டும்?கடந்த 8 அல்லது 9 மாதங்களில் மட்டுமே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.265 உயர்த்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 44 சதவீத விலை உயர்வு ஆகும்.

மானியம் தருவதில்லை
சமையல் கியாஸ் சிலிண்டருக்கு அரசு மானியம் தருவதில்லை. சந்தை விலைக்கும், கடடுப்படுத்தப்பட்ட மானிய விலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.உஜ்வாலா யோஜ்னா என்னும் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் பயனாளிகளால் ரூ.800-க்கு அதிகமாகக்கொடுத்து சிலிண்டர் வாங்க முடியவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பாதித்ததை விட இப்போது 97 சதவீதம் பேர் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். 23 கோடிப்பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே போய் விட்டனர்.
பொருளாதார நெருக்கடியின்போது, மக்கள் வேலைகளை இழந்து, கூலியும் குறைந்து, வேறு வேலைவாய்ப்புகளைத் தேடும்போது, மக்கள் தங்கள் வீட்டின் வரவு செலவு திட்டங்களை சிதைக்கக்கூடாது என்பதை மத்திய அரசு எந்த கட்டத்தில் உணரப்போகிறது?

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்தி இருப்பதை கடுமையாக சாடி உள்ளார்.

Next Story