“தலீபான்கள் ஆட்சியை போல் உள்ளது” மத்திய மந்திரி கைதுக்கு பாஜக கடும் விமர்சனம்


“தலீபான்கள் ஆட்சியை போல் உள்ளது” மத்திய மந்திரி கைதுக்கு பாஜக கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 24 Aug 2021 11:34 AM GMT (Updated: 24 Aug 2021 11:34 AM GMT)

மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டார்.

மும்பை,

சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்-மந்திரியை உத்தவ் தாக்கரேவை, நான் அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன்  எனக்கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மராட்டிய போலீசார் கைது செய்தனர். கடந்த 20 ஆண்டுகளில் மத்திய மந்திரி ஒருவர் கைது ஆவது இதுதான் முதல் தடவையாகும். 

இதற்கிடையே, மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: -  மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டது அரசியல் அமைப்பு மதிப்புகளை மீறிய செயல் ஆகும். இந்த நடவடிக்கையால் நாங்கள் எங்களை ஒடுக்கவோ அச்சுறுத்தவோ முடியாது” என்று பதிவிட்டுள்ளார். 

மராட்டிய முன்னாள் முதல் மந்திரியும் அம்மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “ ரானேவின் கருத்தை பாஜக ஆதரிக்கவில்லை. அதேவேளையில் அவருக்கு ஆதரவாக பாஜக 100 சதவீதம் உள்ளது.  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கருவியாக  மாநில காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு இருக்க வேண்டும். தலீபான்களை போன்ற ஆட்சி நிர்வாகம் இருக்கக் கூடாது” என்றார். 


Next Story