மேகதாது அணை திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு


மேகதாது அணை திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு
x
தினத்தந்தி 27 Aug 2021 7:24 PM GMT (Updated: 27 Aug 2021 7:24 PM GMT)

மேகதாது அணை திட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே 67.16 டி.எம்.சி. கொள்ளளவில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.9 ஆயிரம் கோடி செலவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிட்டிருப்பது காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது.

இந்த அணைத் திட்டத்தால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலுவுக்கு கிடைத்துவரும் 177.25 டி.எம்.சி. நீர் கிடைக்காமல் போகும். மேலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரின் அளவும் பாதிக்கப்படும். இதனால் காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். அணை கட்டப்பட்டால் 5 ஆயிரத்து 252 எக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி மனு தாக்கல் செய்தது. மேகதாது அணை, குடிநீர் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த 2018, நவம்பர் 22-ந் தேதி அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளன.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்துவரும் போதும், தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமுக தீர்வு எட்டியபிறகு திட்டத்துக்கான ஆய்வு அனுமதி வழங்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தபிறகும், அணை திட்டத்துக்கான ஆய்வு அனுமதி கோரி வனத்துறைக்கு கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது.

எனவே, மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு கடந்த 2019, ஜனவரி 18-ந் தேதி சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரையில், இந்த அணை திட்டம் தொடர்பாக அனுமதி கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்யும் எந்தவொரு விண்ணப்பத்தையும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஏற்பதற்கு தடைவிதிக்க வேண்டும்,

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story