‘2+2 பேச்சுவார்த்தை’: ஆஸ்திரேலிய ராணுவ, வெளியுறவு மந்திரிகள் இந்தியா வருகை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Sep 2021 3:35 AM GMT (Updated: 9 Sep 2021 3:35 AM GMT)

ராஜ்நாத்சிங், ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆஸ்திரேலிய ராணுவ, வெளியுறவு மந்திரிகள் இந்தியா வருகை தர உள்ளனர்.

புதுடெல்லி, 

இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. பாதுகாப்பான, வலுவான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாடுகளிடையே நட்புறவு நிலவி வருகிறது.

இந்த நாடுகளின் ராணுவ, வெளியுறவு மந்திரிகள் ‘2+2 பேச்சுவார்த்தை’ என்ற பெயரில் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில், ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி பீட்டர் டட்டான், வெளியுறவுத்துறை மந்திரி மரிஸ் பய்னே ஆகியோர் இந்தியா வருகிறார்கள். பீட்டர் டட்டான், இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்குடனும், மரிஸ் பய்னே, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

பொருளாதார பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, பருவநிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் பேச உள்ளனர். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த கூட்டு நடவடிக்கைகள், சமமான, பாதுகாப்பான முறையில் தடுப்பூசிகள் வினியோகம், சர்வதேச பொருளாதார மீட்புக்கான முயற்சிகள் ஆகியவை குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர். இந்திய பயணத்தை தொடர்ந்து, இந்தோனேஷியா, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் அவர்கள் செல்ல உள்ளனர்.

Next Story