இடஒதுக்கீட்டை மீட்டெடுத்த பிறகே உள்ளாட்சி தேர்தல்: நானா படோலே


இடஒதுக்கீட்டை மீட்டெடுத்த பிறகே உள்ளாட்சி தேர்தல்: நானா படோலே
x
தினத்தந்தி 12 Sep 2021 7:29 PM GMT (Updated: 2021-09-13T00:59:56+05:30)

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்ட பிறகு தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தவேண்டும் என காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் வாய்ப்பு அளிக்கும் வகையில் மராட்டிய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. மேலும் தேர்தல் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.இதனால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லாமல் போனது.

அரசுக்கு அதிகாரமில்லை
இடஒதுக்கீடு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், அதன்பிறகே தேர்தலை நடத்த வேண்டும் என்று முக்கிய கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக விவாதிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோர் வேட்பாளர்கள் பிரச்சினை தீரும் வரை உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல் இருக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு உள்ளாட்சி தேர்தலை மாநில அரசு ஒத்திவைக்க முடியாது. ஏனெனில் அந்த அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது என்று கூறியது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே நேற்று கூறியதாவது:-

மேல்முறையீடு
மகா விகாஸ் அகாடி அரசு மாநிலத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளை மத்திய அரசிடம் கேட்டுப்பெற சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும்.இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்ட பிறகு தான் வரவிருக்கும் அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். அந்த சமூகத்தில் உறுப்பினர்கள் எந்த ஒரு அரசியல் இழப்பையும் சந்திக்கக்கூடாது.தற்போது மராட்டிய அரசின் அட்வகேட் ஜெனரலாக உள்ள அசுதோஷ் கும்பகோணியின் பதவி குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து நான் பேச உள்ளேன். அவர் கடந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் பதவியில் அமர்த்தப்பட்டவர் ஆவார்.பாரம்பரியமாக, அரசு மாறும்போதும் அட்வகேட் ஜெனரலும் மாற்றப்படுவது வழக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி தேர்தல்
மராட்டியத்தில் அடுத்த ஆண்டு பல்வேறு மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.மும்பையில் பிப்ரவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதேபோல தானே, உல்லாஸ் நகர், புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட், நாசிக், நாக்பூர் போன்ற முக்கிய மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story