காஷ்மீரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


காஷ்மீரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 21 Sep 2021 9:32 PM GMT (Updated: 21 Sep 2021 9:32 PM GMT)

காஷ்மீரில் 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தை தகர்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த விவகாரம் தொடர்பாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று காஷ்மீரில் அதிரடி சோதனை நடத்தினர். 7 இடங்களில் இச்சோதனை நடந்தது. ஸ்ரீநகரின் புறநகரான லஸ்ஜன் பகுதியில், முகமது ஷபி வானி, அவருடைய மகன் ரயீஸ் அகமது ஆகியோரின் வீட்டில் பாதுகாப்பு படையினர் புடைசூழ அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். பாரமுல்லா மாவட்டம் ஷீரியில் ஒரு அரசு ஊழியரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. அனந்த்நாக் மாவட்டத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த விவகாரத்தில், 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஸ்ரீநகர் விமான நிலையத்தை தகர்க்கும் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். விமான நிலையம் அருகே ஹம்ஹமா பகுதியில் உள்ள சாலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேட்பாரின்றி ஒரு பேக் கிடந்தது.

சந்தேகம் அடைந்த வீரர்கள், அப்பகுதியை சீல் வைத்து விட்டு, வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் சோதித்து பார்த்தபோது, பேக்கில் 6 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்தது.

அதை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பத்திரமாக செயலிழக்க வைத்தனர். பிறகு அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்படவில்லை. வழக்கம்போல் விமானங்கள் இயக்கப்பட்டன.


Next Story