மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு


மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 25 Sep 2021 6:22 PM GMT (Updated: 25 Sep 2021 6:22 PM GMT)

மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிக்கைக்கு எதிரான ரிட் மனுக்கள் தொடர்பாக அக்டோபர் 6-ந்தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
சுப்ரீம் கோர்ட்டில், கோவாவை சேர்ந்த நெயில் ஆரோல்யோ நியூன்ஸ் உள்ளிட்ட 17 மருத்துவ மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், மருத்துவ, பல்மருத்துவ பட்ட படிப்புகளிலும், மேல்படிப்புகளிலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும், இது இந்த கல்வி ஆண்டிலேயே நடைமுறைக்கு வருகிறது என்றும் மத்திய அரசு கடந்த ஜூலை 29-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் அறிவிக்கையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்.

தடை விதிக்க கோரிக்கை
மருத்துவ மேல்படிப்புகளுக்கான சேர்க்கையை இந்த இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் நடத்த மெடிக்கல் கவுன்சில் கமிட்டிக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசின் இடஒதுக்கீடு அறிவிக்கையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

4 வார அவகாசத்துக்கு கோரிக்கை
விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள் தொடர்பாக பதிலளிக்க 4 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார்.மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர், ரிட் மனுக்கள் தொடர்பாக இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

அக்டோபர் 6-ந்தேதிக்குள்...
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகள் 2 வாரங்களுக்குள் வெளியாகும் என்பதால், 4 வாரங்கள் அவகாசம் அளிக்க முடியாது. அக்டோபர் 6-ந்தேதிக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என உத்தரவிட்டனர்.

Next Story