மக்கள் பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர் எதற்கு? சிவசேனா


மக்கள் பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர் எதற்கு? சிவசேனா
x
தினத்தந்தி 26 Sep 2021 8:03 PM GMT (Updated: 26 Sep 2021 8:03 PM GMT)

மக்கள் பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர் எதற்கு என சிவசேனா கிண்டல் அடித்து உள்ளது.

தியேட்டர் ஏன்?
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒருவாரமாக பாதிப்பு 3 ஆயிரத்து 500-க்குள் தான் உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 7-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த மாதம் 22-ந் தேதி முதல் மாநிலத்தில் தியேட்டர், நாடக அரங்குகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார். இந்த நிலையில் மக்களுக்கு பொழுதை போக்க பா.ஜனதா இருக்கும் போது தியேட்டர்களை ஏன் திறக்க வேண்டும் என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

காமெடி, திரில்லர்

இது குறித்து சாம்னாவின் தலையங்கத்தில் அந்த கட்சியின் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் பா.ஜனதா தலைவர் கிரித் சோமையா வெவ்வேறு மாநில மந்திரிகளின் மீது குற்றச்சாட்டுகளை கூறி அவர்களின் தொகுதிகளுக்கு செல்கிறார். மாநில அரசு அவரின் பயணங்களை தடுக்க கூடாது என நான் நினைக்கிறேன். அவரின் குற்றச்சாட்டுகள் சோப்பு நுரையில் விடப்படும் குமிழ்கள் போன்றவை. மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வித்தியாசமான ஸ்டைலை உடையவர். கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் போதும், அரசியல் கேலிக்கை நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்து வருகிறது. எல்லா இடங்களிலும் வேடிக்கை காட்டப்படுகிறது.

எதிர்க்கட்சியால் வழங்கப்படும் பொழுதுபோக்கில் திரில்லர், காமெடி உள்ளது. எனவே சினிமா தியேட்டர், அரங்குகளை திறப்பதற்கான தேவை என்ன?.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story