லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை


லடாக் மோதல் விவகாரம்: இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 9 Oct 2021 6:48 PM GMT (Updated: 9 Oct 2021 6:48 PM GMT)

லடாக் எல்லை மோதல் தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

லடாக் மோதல்

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதால் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.இதைத்தொடர்ந்து அங்கு சரச்சைக்குரிய பகுதிகளில் இரு நாடுகளும் பெருமளவில் ராணுவத்தையும், ஆயுதங்களையும் குவித்து உள்ளன. இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

தொடர் பேச்சுவார்த்தை

எனினும் அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இரு தரப்பும் முனைப்பு காட்டி வருகின்றன. எனவே இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இருதரப்புக்கு இடையே 12 சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதன் பயனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.இதைப்போல கடந்த ஜூலை 31-ந் தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன.

13-வது சுற்று பேச்சு

இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான 13-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்கிறது. லடாக் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீன பகுதிக்குள் அமைந்துள்ள மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.இந்த பேச்சுவார்த்தையில் லே-ஐ மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் தலைமையிலான அதிகாரிகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

அருணாசல பிரதேசத்தில் ஊடுருவல் முயற்சி

லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டார் மற்றும் உத்தரகாண்டின் பரகோட்டி செக்டார் போன்ற பகுதிகளில் சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டது.இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். அத்துடன் உள்ளூர் கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் மூலம் அங்கு இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டது.

இதனால் எழுந்துள்ள பரபரப்பான சூழலில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Next Story