பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் - அரசு தரப்பு


image courtesy: PTI
x
image courtesy: PTI
தினத்தந்தி 14 Oct 2021 10:19 AM GMT (Updated: 14 Oct 2021 10:19 AM GMT)

ஆர்யனின் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதாடும் போது இது ஒரு அபத்தமான மற்றும் பொய்யான குற்றச்சாட்டு" என்று கூறினார்.

மும்பை, 

மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

தற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் சார்பில் ஆஜரான வக்கீல் “போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஆர்யன் கான் ஒரு இளைஞர். அவர் போதைப்பொருள் விற்பனையாளரோ, கடத்தல்காரரோ அல்லது போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவரோ இல்லை. மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும கைப்பற்றப்படவில்லை என்பதால் அவரை ஜாமீனில் விடுக்க வேண்டும்” என வாதிட்டார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்தால் விசாரணை பாதிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் கான் மற்றும் ஆர்பாஸ் மெர்சந்த் வாட்ஸ்அப் உரையாடல்கள் போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு தொடர்பு குறித்து பேசுகிறது.

ஒட்டுமொத்த தேசத்திலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருட்களை உட்கொள்வது ஒரு கடுமையான குற்றம். ஆர்யன் கானிடம் போதைப்பொருள் பிடிபடவில்லை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்பாஸ் மெர்சந்த் கைவசம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் வழக்கை தனித்தனியாகவோ அல்லது வேறுபட்டதாகவோ கருத முடியாது. இவர்களுக்குள் நெருக்கிய தொடர்பு இருந்துள்ளது.

பிரமாண பத்திர தகவலின் படி ஆர்யன் கானுக்கு குற்றச்சதி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கொள்முதல் மற்றும் நுகர்வு என அனைத்து வகையிலும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை விடுதலை செய்தால் அவர் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தி மற்ற சாட்சிகள் மற்றும் சான்றுகளை சிதைக்க வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். இருதரப்பு வாதங்களை கேட்டபின் ஜாமீன் மனு விசாரணையை இன்று  மும்பை ஐகோர்ட்டு  ஒத்திவைத்தது.

இந்த நிலையில் கைதான ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை செஷன்ஸ் நீதிமன்றத்தில்  இன்று நடந்தது

ஆரியன் கான் போதைப்பொருள்  தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என  விசாரணையின் போது  போதைப்பொருள் அமைப்பு  கூறியது. 

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ஆரிய கான் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் உட்கொண்டு வருகிறார் என்று நீதிமன்றத்தில் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

ஆர்யன் கான் ஒரு முறை மட்டும் போதை மருந்து உட்கொள்ளவில்லை. அவரிடம் எடுக்கபட்ட சோதனை அறிக்கைகளில் அவர்  கடந்த சில வருடங்களாக போதை மருந்து உட்கொண்டது தெரியவந்து உள்ளது.இந்த வழக்கில் ஜாமீன் வழங்க முடியாது என்பதே எனது வாதம் " என்று  அனில் சிங் கூறினார். 

ஆர்யனின் வழக்கறிஞர் அமித் தேசாய் வாதாடும் போது சட்டவிரோத கடத்தல் குற்றச்சாட்டு இயல்பாகவே அபத்தமானது. எதுவும் இல்லாத இந்த பையன், அவன் கப்பலில் கூட இல்லை. இது ஒரு அபத்தமான மற்றும் பொய்யான குற்றச்சாட்டு" என்று  கூறினார்.

Next Story