முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது


முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது
x
தினத்தந்தி 18 Oct 2021 10:20 PM GMT (Updated: 18 Oct 2021 10:20 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரிய ஜோ ஜோசப் மனு, கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் இடையிலான முல்லைப்பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி கொச்சியை சேர்ந்த சுரக்‌ஷா அறக்கட்டளை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு ஆகியவற்றை இணைத்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக்கொள்வது குறித்த அட்டவணை, அணையின் மதகுகளை திறப்பது குறித்த அட்டவணை ஆகியவற்றை மத்திய நீர்வள ஆணையத்தின் கீழ் செயல்படும் அணை கண்காணிப்பு குழு 4 வாரங்களுக்குள் உருவாக்கி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மார்ச் 16-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆட்சேபனையை ஏற்க முடியாது

அந்தவகையில், மத்திய அரசு நிலை அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தின் துணை இயக்குனர் நிதின் குமார் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு-

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக்கொள்வது குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் உதவியுடன் தமிழகம் தயாரித்த அட்டவணையை இறுதி செய்வதற்கான கூட்டம் கடந்த ஜூலை 9-ந் தேதி நடைபெற்றது.

இதுதொடர்பாக கேரளத்தின் சார்பில் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. தென் மேற்கு பருவமழையின்போது செப்டம்பர் 20-ந் தேதியும், வடகிழக்கு பருவமழையின்போது நவம்பர் 30-ந் தேதியும் அணையில் அதிகபட்சமாக 142 அடி அளவுக்கு நீரை தேக்கி வைப்பது தொடர்பாக கேரள அரசு தெரிவித்த ஆட்சேபனையை ஏற்றுக்கொள்ள முடியாது. நவம்பர் 20-ந் தேதிக்கு பிறகு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு பருவமழை வெள்ளத்தை முன்னிட்டு குறைக்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டத்தை...

இதுபோல, வெள்ளம் ஏற்படும்போதெல்லாம், அணையின் மொத்த கொள்ளவுக்கும், அதிகபட்ச கொள்ளவுக்கும் இடையிலான நிரப்பிடத்தை பயன்படுத்த முடியும். இதுபோல, அணையில் அதிகபட்ச கொள்ளவு நீரை வைக்கும் நாளிலும் அணையின் மொத்த கொள்ளவுக்கும், அதிகபட்ச கொள்ளவுக்கும் இடையிலான நிரப்பிடத்தை பயன்படுத்த முடியும். இது விஞ்ஞானபூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளதால், அணையில் அதிகபட்சமாக 142 அடி அளவுக்கு நீரை தேக்கி வைப்பதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

பருவமழையின்போது ஏற்படும் அதிக அளவிலான வெள்ளத்தின்போது, தேக்கி வைக்கப்படும் நீரின் அளவு 142 அடியை தாண்டும். சில மணி நேரங்களில் தாண்டும் இந்த நீரின் அளவு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என கொள்ள முடியாது. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய அணையின் நீர்மட்டத்தை மாதந்தோறும் வைத்துக்கொள்வது குறித்த மத்திய நீர்வள ஆணையத்தின் உதவியுடன் தமிழகம் தயாரித்த அட்டவணையை ஏற்பது தொடர்பான முடிவை சுப்ரீம் கோர்ட்டிடம் விட்டுவிடுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story