நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய மந்திரி அத்வாலே அறிவுரை!


நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய மந்திரி அத்வாலே அறிவுரை!
x
தினத்தந்தி 25 Oct 2021 2:03 AM GMT (Updated: 25 Oct 2021 2:03 AM GMT)

போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஆர்யன் கான் குறித்து நடிகர் ஷாருக்கானுக்கு மத்திய மந்திரி அத்வாலே அறிவுரை வழங்கியுள்ளார்.

மும்பை,

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தற்போது சிறையில் உள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே, “இளம் வயதிலேயே போதைப்பொருள் எடுத்துக் கொள்வது நல்ல விஷயம் அல்ல. ஆர்யன் கானை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு அவர் 2 மாதங்களாவது இருக்க வேண்டும். அவர் சிறையில் இருப்பதை விட மறுவாழ்வு மையத்தில் இருப்பதே சிறந்தது. மறுவாழ்வு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வருவார்.

ஷாருக்கான் தரப்பினர் குறைந்தது 5 முறையாவது ஜாமீன் கேட்டு கோர்ட்டில் முறையீடு செய்திருப்பர். ஆனால், அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதன்மூலம், போதைப்பொருள் கட்டுப்பாடு துறைக்கு முழு அதிகாரம் இருப்பது தெரிகிறது. அனைத்தும் சட்டப்படி தான் நடக்கின்றன. மாநில அமைச்சகத்தின் பரிந்துரையின்படி ஒரு புது சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டத்தின்படி போதைப்பொருள் வழக்கில் கைதாகும் சிறார்களை சிறையில் அடைக்காமல், மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்க அந்த சட்டம் வழி செய்யும்” என்று அவர் கூறினார்.   

முன்னதாக மத்திய சமூக நீதி அமைச்சகம், வருவாய் துறைக்கு ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், தனிப்பட்ட உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருப்பதை குற்ற பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அதற்கேற்ப சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது. அப்படி சிறிய அளவில் போதைப்பொருள் வைத்திருந்து பிடிபட்டவர்களை சிறையில் தள்ளாமல் அரசு மையங்களில் கட்டாய சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Next Story