விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்


விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:23 AM GMT (Updated: 19 Nov 2021 9:23 AM GMT)

தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  

தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  

இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  எனினும், தேர்தலை கருத்தில் கொண்டே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேதனை ஏற்படுத்தியதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியிருப்பதாவது;-  

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தோல்வி ஏற்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாகவே பாஜக அரசு சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் அதிகாரமும் அவர்களின் முதலாளித்துவ நண்பர்களும் இறுதியில் தோல்வி அடைந்துள்ளனர். இன்று மோடியின் ஆணவம் தோற்ற தினமாகும்” என்றார். 

மேலும்,  மோடி அரசுக்கு ஐந்து கேள்விகளை முன்வைத்துள்ள காங்கிரஸ், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அளிப்பதற்கு என்ன திட்டத்தை பாஜக வைத்துள்ளது, விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்கு ஆக்க என்ன திட்டம்  பாஜக அரசிடம் உள்ளது? போன்ற கேள்விகளை முன்வைத்துள்ளது. 


Next Story