எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கூறுவதா? - இந்தியா மீது பாகிஸ்தான் விமர்சனம்


எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக  கூறுவதா? -  இந்தியா மீது பாகிஸ்தான் விமர்சனம்
x
தினத்தந்தி 23 Nov 2021 9:27 AM GMT (Updated: 23 Nov 2021 9:27 AM GMT)

எப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவது அடிப்படை ஆதாரம் அற்றது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லமாபாத்,

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தனுக்கு,  வீரதீர செயல்களுக்காக இந்தியாவின் 3-ஆவது உயரிய பாதுகாப்புத்துறை விருதான வீர் சக்ரா விருதை  ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார். 

இந்த நிலையில், எப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறுவது அடிப்படை ஆதாரம் அற்றது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய விமானப்படை விமானியால் பாகிஸ்தானின் எப் -16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. குறிப்பிட்ட அந்த தினத்தில்  எப் -16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என சர்வதேச நிபுணர்களும் அமெரிக்க அதிகாரிகளும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கின்ற்னர்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எப்-16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஏன்?

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப் படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்துவிட்டு பிப்ரவரி (2019- ஆம் ஆண்டு) மாதம் 26-ம் தேதி திரும்பியது. இதையடுத்து, இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அமெரிக்கா அளித்த எப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தி இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் விமானப்படை நுழைந்தன

இந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைஸன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் இடைமறித்தார். 

அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து திரும்பியபோது அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். ஏற்குறைய 60 மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து அதன்பின் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story