லஞ்சம் தர மறுத்தேன்; சீட் மறுப்பு: காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு


லஞ்சம் தர மறுத்தேன்; சீட் மறுப்பு:  காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Jan 2022 11:24 PM GMT (Updated: 14 Jan 2022 11:24 PM GMT)

லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக சீட் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் பெண் தொண்டர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.



லக்னோ,


உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பா.ஜனதா ஆளும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும், வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

இந்த நிலையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டெல்லியில் இதனை வெளியிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று பிரியங்கா ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கேற்ப இப்பட்டியலில் பெண்களுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது, 50 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

அதுபோல், இன்னும் 50 வேட்பாளர்கள், இளைஞர்கள் ஆவர். உன்னா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான இளம்பெண்ணின் தாயார் ஆஷா சிங், உன்னா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் லஞ்சம் கொடுக்க மறுத்ததற்காக தனக்கு சீட் ஒதுக்கவில்லை என காங்கிரஸ் பெண் தொண்டர் பிரியங்கா மவுரியா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.  கட்சியின் பிரசாரத்திற்கு போஸ்டர் பெண்ணாக பிரியங்கா பயன்படுத்தப்பட்டார்.

இதுபற்றி பிரியங்கா மவுரியா கூறும்போது, அனைத்து வேலைகளையும் செய்து முடித்தேன்.  ஆனால், ஒரு மாதத்திற்கு கட்சிக்கு வந்த நபருக்கு சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.  இது முன்பே திட்டமிடப்பட்டது.  அடிமட்ட அளவில் நடைபெறும் இதுபோன்ற விசயங்களை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

எனக்கு போனில் அழைப்பு விடுத்த நபர் தேர்தலில் சீட் ஒதுக்க லஞ்சம் கேட்டார்.  ஆனால் நான் மறுத்து விட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story