ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் பாம்பு கடித்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து சென்ற விவசாயி


ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் பாம்பு கடித்து இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து சென்ற விவசாயி
x
தினத்தந்தி 12 Oct 2022 9:58 AM IST (Updated: 12 Oct 2022 10:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீகாளஹஸ்தி அருகே பாம்புகடித்து, சிகிச்சை பலனின்றி இறந்த சிறுவனின் உடலை ஏற்றிசெல்ல ஆம்புலன்ஸ் வர மறுத்ததால், தந்தையே தோளில் சுமந்து சென்றார்.

ஸ்ரீகாளஹஸ்தி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தங்கள் நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தனர். சிறுவன் பசவையா வீட்டின் அருகே இருந்துள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக அவனை சிகிச்சைக்காக, தந்தை செஞ்சய்யா கே.வி.பி. புரம் முதன்மை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் சிறுவன் இறந்துவிட்டான்.

அதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை வீட்டுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 108 ஆம்புலன்சை அணுகியபோது அவர்கள் சிறுவனின் உடலை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டனர். இதேபோல் ஆட்டோ உள்ளிட்ட வாகன டிரைவர்களும் மறுத்துவிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி மகன் பசவையாவின் உடலை, அவனது தந்தை செஞ்சய்யா தனது தோளிலேயே சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்றார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story