ஆந்திர பிரதேசம்: டாக்டர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு


ஆந்திர பிரதேசம்: டாக்டர் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 1 May 2024 10:17 AM GMT (Updated: 1 May 2024 10:45 AM GMT)

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சீனிவாஸ்(40). இவர் தனது மனைவி உஷா ராணி(38), ஒரு மகன், ஒரு மகள் மற்றும் தாயார் ரமணம்மா(70) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் டாக்டர் சீனிவாஸ் உள்பட அவரது குடும்பத்தினர் 5 பேரும் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இதில் டாக்டர் சீனிவாஸ் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மற்ற 4 பேரும் கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விஜயவாடா கிழக்கு டி.சி.பி. அதிராஜ் சிங் ராணா கூறுகையில், எலும்பியல் நிபுணரான டாக்டர் சீனிவாஸ், தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக டாக்டர் சீனிவாஸ் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததாகவும், சமீபத்தில் தனது மருத்துவமனையை அவர் விற்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக திங்கள்கிழமை இரவு, டாக்டர் சீனிவாஸ் தனது காரின் சாவியை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து, தனது குடும்பத்தினர் அனைவரும் வெளியே செல்ல இருப்பதாகவும், கார் சாவியை தனது சகோதரரிடம் ஒப்படைக்குமாறும் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை மற்றும் தற்கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story