பெலகாவியில் போராட்டம் நடத்த முயற்சி: கன்னட அமைப்பினர் 18 பேர் மீது வழக்கு


பெலகாவியில் போராட்டம் நடத்த முயற்சி: கன்னட அமைப்பினர் 18 பேர் மீது வழக்கு
x

பெலகாவியில் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினர் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெலகாவி:

பெலகாவியில் போராட்டம் நடத்த முயன்ற கன்னட அமைப்பினர் 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

18 பேர் மீது வழக்கு

கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் எல்லை பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது. இந்த நிலையில் பெலகாவியில் உள்ள மராட்டிய அமைப்புகளை சந்தித்து பேச உள்ளதாக மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகியோர் அறிவித்து இருந்தனர். அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவி அருகே இரேபாகேவாடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக நேற்று முன்தினம் கன்னட அமைப்பினர் கார்களில் அணிவகுத்து நின்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக வந்த மராட்டிய பதிவெண் கொண்ட லாரிகள் மீது கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சி செய்ததுடன், லாரிகள் மீது கல்வீசி தாக்கியதாக கன்னட அமைப்பினர் 18 பேர் மீது இரேபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

நடந்து சென்ற பயணிகள்

இந்த நிலையில் நேற்று அதிகாலை மராட்டிய மாநிலம் ரத்னகிரி சிந்துதுர்கா பகுதியில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த கர்நாடக அரசு பஸ்கள் மீது சிவசேனா கட்சியினர் காவி மை பூசினர். மேலும் பஸ்களில் சிவசேனா கட்சியின் கொடியை பறக்கவிட்டனர். இதுபோல நாசிக்கில் உள்ள கர்நாடக வங்கியின் பெயர் பலகையிலும் கருப்பு மை பூசப்பட்டது. இருமாநிலங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினையால் பெலகாவியில் இருந்து மராட்டியம் செல்லும் 150 அரசு பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் பரிதவித்து போனார்கள். பின்னர் பயணிகளின் வசதிக்காக பெலகாவியில் இருந்து இயக்கப்பட்ட பஸ்கள் நிப்பானி வரை சென்றது. அதுபோல மராட்டிய பஸ்களும் எல்லை வரை சென்றது. இதனால் எல்லையை கடந்து பயணிகள் பஸ் ஏறி சென்றனர். அதாவது 4 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்து சென்று பஸ் ஏறினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story