அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 3-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதிகள், தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என கூறியது. தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கெஜ்ரிவால் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை 9ஆம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.


Next Story