மிசோரமில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகள் கடிதம்


மிசோரமில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் - தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகள் கடிதம்
x

மிசோரமில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அரசியல் கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

ஐஸ்வால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந்தேதி எண்ணப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஆனால் வாக்கு எண்ணப்படும் டிசம்பர் 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த தேதியை மாற்ற வேண்டும் என மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும் மாநில கிறிஸ்தவர்களின் பேரமைப்பும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், 'ஞாயிற்றுக்கிழமைகள் கிறிஸ்தவர்களுக்கு புனிதமானவை. அன்று அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் தேவாலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. எனவே வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும், மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுவதால் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளன.


Next Story