கார்கே தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம்; இன்று மாலை கூடுகிறது
காங்கிரஸ் கட்சி 39 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கடந்த 8-ந்தேதி வெளியிட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், பா.ஜ.க. தன்னுடைய 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. அக்கட்சியின் பொது செயலாளர் வினோத் தாவடே இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில், 34 மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகளின் பெயர்கள் இடம் பெற்றன. முன்னாள் முதல்-மந்திரிகள் இரண்டு பேரும் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலின்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டியின் முதல் கூட்டம் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த 8-ந்தேதி அக்கட்சி 39 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டியின் 2-வது கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே தலைமையில் நடக்கிறது. இதில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவரான சோனியா காந்தி, வயநாடு எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், அரியானா, தமிழகம், புதுடெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகளை பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரசின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், சத்தீஷ்கார், கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.