திருவள்ளுவர் சிலை சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளுவர் சிலை சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

திருவள்ளுவர் சிலை சுற்றுச்சுவர் இடிக்கப்பட்ட விவகாரத்தில் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு:

போராட்டம் நடத்தினர்

பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலை உள்ளது. அந்த சிலை உள்ள பகுதியில் ரூ.2 கோடியில் பூங்கா அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நிதியை ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். திருவள்ளுவர் சிலை பீடத்தை சுற்றிலும் சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பீடத்தில் ஒட்டப்பட்டுள்ள சிலை திறப்பு விழா கல்வெட்டு பாதி அளவுக்கு மறைந்துவிட்டது. அந்த கல்வெட்டில் சிலையை திறந்து வைத்த எடியூரப்பா, மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து அறிந்த பா.ஜனதாவினர் திருவள்ளுவர் சிலை உள்ள இடத்திற்கு வந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு

மேலும் சுற்றுச்சுவரின் முன்பகுதியை இடித்து அகற்றினர். பெங்களூரு மாநகராட்சியின் உத்தரவின்பேரில் அது இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அரசின் அனுமதி இல்லாமல் பா.ஜனதாவினரே அதை இடித்ததாக காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். இதையடுத்து திருவள்ளுவர் சிலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூரு திருவள்ளுவர் சிலை பகுதியில், பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரிஸ்வான் ஹர்ஷத், தினேஷ் குண்டுராவ், அகண்ட சீனிவாசமூர்த்தி, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பா.ஜனதாவை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இதில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் ரிஸ்வான் ஹர்ஷத், தினேஷ் குண்டுராவ், அகண்ட சீனிவாமூர்த்தி, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் பேசியதாவது:-

அனைவரும் மதிக்கிறோம்

திருவள்ளுவர் சிலை இருக்கும் பகுதியில் ரூ.2 கோடி செலவில் பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ரிஸ்வான் ஹர்ஷத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கப்பட்டது. திருவள்ளுவரை தெய்வ புலவராக நாம் அனைவரும் மதிக்கிறோம். அவர் தனது திருக்குறள் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகின் மனித சமூகத்திற்கு வழிகாட்டியுள்ளார். அவரை நாம் அனைவரும் போற்றுகிறோம். போற்ற வேண்டும்.

ஆனால் பா.ஜனதாவினர், கல்வெட்டு மறைக்கப்பட்டதாக கூறி அதை இடித்து அகற்றியுள்ளனர். இது அவர்களின் குண்டர்களின் கலாசாரத்தை காட்டுகிறது. எந்த வித அனுமதியும் இல்லாமல் சுற்றுச்சுவரை இடித்தது கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். திருவள்ளுவருக்கு பா.ஜனதாவினர் அவமரியாதை செய்துள்ளனர்.

மறைக்க மாட்டோம்

கல்வெட்டை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அந்த கல்வெட்டுக்கு பதிலாக அதே தகவல்களுடன் வேறு கல்வெட்டை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். யாருடைய பெயரையோ அல்லது தகவல்களையோ மறைக்க மாட்டோம். முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி உள்ளிட்டோர் சிலையை திறந்து வைத்தனர். இதில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையாவும் கலந்து கொண்டார். இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. பா.ஜனதாவினர் தான் உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பா.ஜனதா தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததும் காங்கிரசார் அங்குள்ள சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு நிலவியது. அதன் பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story