மண்டியாவில் தொடரும் போராட்டம்:மாட்டு சாணத்தில் குளியல் போட்ட பா.ஜனதா தொண்டர்


மண்டியாவில் தொடரும் போராட்டம்:மாட்டு சாணத்தில் குளியல் போட்ட பா.ஜனதா தொண்டர்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:45 PM GMT)

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் மண்டியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. மண்டியா டவுனில் நடந்த போராட்டத்தில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் மாட்டு சாணத்தில் குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மண்டியா:-

காவிரி நீர்

கர்நாடகம், தமிழகம் இடையே தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவின்பேரில் மீண்டும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர் போராட்டங்கள்

இதை கண்டித்து மண்டியா, மைசூரு, பெங்களூரு, சாம்ராஜ்நகர் உள்பட கர்நாடகம் முழுவதும் கன்னட அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினரும், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக காவிரியின் குறுக்கே கட்டப்பட்டு இருக்கும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மாட்டுச்சாணம்

நேற்று மண்டியாவில் பா.ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்தின் போது தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கூடாது என்று வலியுறுத்தி பா.ஜனதாவைச் சேர்ந்த சிவக்குமார் ஆராத்யா என்பவர் தன் மீது மாட்டு சாணத்தை ஊற்றிக்கொண்டு போராட்டம் நடத்தினார்.

மாட்டுச்சாணத்தை அவர் தண்ணீரில் கரைத்து வைத்திருந்தார். அதை அவர் தன் மீது ஊற்றி குளியல் போட்டு போராட்டம் நடத்தினார். அவர் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டியாவில் நடந்த முழுஅடைப்பு போராட்டத்தின் போது மண்ணை தின்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபோல் கே.ஆர்.பேட்டையில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

கண்டன ஊர்வலம்

குறிப்பாக ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் கலந்து கொண்டு காவிரி நீர் திறப்பை உடனடியாக நிறுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். மேலும் கே.ஆர்.பேட்டை டவுனில் மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்தினர்.

இதேபோல் மலவள்ளியிலும் நேற்று கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் விவசாயிகள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதில் கன்னட அமைப்பின் ஒரு பிரிவினர் மலவள்ளி டவுனில் உள்ள விசுவேஸ்வரய்யா சர்க்கிளில் இருந்து கண்டன ஊர்வலம் நடத்தினர்.

பரபரப்பு

மேலும் கன்னட அமைப்பின் பெண்கள் பிரிவினர், குழந்தைகளுடன் மலவள்ளி டவுனில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ரத்தத்தால் 'காவிரி நீர் எங்களுடையது', காவிரி நீரை யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது போன்ற வாசகங்களை எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ககனசுக்கி நீர்வீழ்ச்சி பகுதியில் மறைந்த நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது மகனும், நடிகருமான மறைந்த புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களுடன் கன்னட அமைப்பினர் சென்று காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே மண்டியா டவுனில் கலெக்டர் அலுவலகம் எதிரே கடந்த 25 நாட்களாக விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் நேற்று 26-வது நாளாக தொடர்ந்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக மண்டியா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கே.ஆர்.எஸ். அணை, மண்டியா டவுன் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story