டெல்லியில் அடர்பனி; 24 ரெயில்கள் காலதாமதம்


டெல்லியில் அடர்பனி; 24 ரெயில்கள் காலதாமதம்
x

வடபகுதிகளான பஞ்சாப், அரியானா, சண்டிகார், உத்தர பிரதேசத்தில் காலையில் சில மணிநேரம் வரை அடர்ந்த பனிக்கான சூழல் காணப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் வட பகுதிகளில் சில நாட்களாக குளிர் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக குளிரான தினம் பதிவானது. இதன்படி, அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

இது இயல்பான வெப்பநிலையை விட 6 டிகிரி குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. டெல்லியில், நேற்று முன்தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது.

இதேபோன்று, டெல்லியில் நேற்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் நேற்று மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டது. டெல்லியில் காற்று தரம் மிக மோசம் என்ற அளவில் பதிவாகி இருந்தது. டெல்லியின் பல பகுதிகளில் குளிர் பரவி வருகிறது.

இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று ரெயில் சேவையும் பாதிப்படைந்து உள்ளது. சாலையோரம் வசிப்பவர்களை இரவு கூடாரங்களில் தங்க வைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. வடபகுதிகளான பஞ்சாப், அரியானா, சண்டிகார், உத்தர பிரதேசத்தில் காலையில் சில மணிநேரம் வரை அடர்ந்த பனிக்கான சூழல் காணப்படுகிறது.

வருகிற 14-ந்தேதி வரை இந்நிலை நீடிக்கும். ஜம்மு பிரிவு, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், வட ராஜஸ்தான், வட மத்திய பிரதேசம், ஒடிசா மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் அதிக பனிக்கான சூழல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில், அடர்பனியால் 24 ரெயில்கள் மிக காலதாமதத்துடன் இன்று இயக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டெல்லிக்கு வர கூடிய ரெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புகளால் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க காத்திருக்கும் உறவினர்களும் சிரமமடைந்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ஐதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், அஜ்மீர், பூரி, ரேவா, செகந்திராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து டெல்லி செல்ல கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story