டெல்லி: கவர்னர் முன்னிலையில் ரூ.1,600 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு


டெல்லி:  கவர்னர் முன்னிலையில் ரூ.1,600 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
x
தினத்தந்தி 20 Feb 2024 11:28 PM IST (Updated: 20 Feb 2024 11:29 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா, ஹெராயின், கொக்கைன், தோடா போஸ்ட் மற்றும் பிற போதை பொருட்களும் தீயிலிட்டு கொளுத்தப்பட்டவற்றில் அடங்கும்.

புதுடெல்லி,

போதை பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் அளித்த அறிவுறுத்தல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, டெல்லி போலீசார் வெவ்வேறு குழுக்களை அமைத்தனர்.

இதன்படி, 2009 முதல் 2013 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் தொடர்புடைய வழக்குகள் பற்றி இந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனா முன்னிலையில், போதை பொருட்களை அழிக்கும் பணி இன்று நடந்தது. மொத்தம் 10,631 கிலோ போதை பொருட்களை டெல்லியின் ஜஹாங்கீர்புரி நகரருகே தொழிற்சாலை பகுதியில் போலீசார் இன்று தீயிலிட்டு கொளுத்தி, அழித்தனர்.

இவற்றில் கஞ்சா, ஹெராயின், கொக்கைன், தோடா போஸ்ட் மற்றும் பிற போதை பொருட்களும் அடங்கும். சந்தையில், இந்த போதை பொருட்களின் மதிப்பு ரூ.1,600 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

வருங்காலத்திலும் இதுபோன்ற சட்டவிரோத போதை பொருட்களை இந்த வகையில் அழிக்கும் நடைமுறை தொடரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


Next Story