குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா
பெங்களூரு குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
பெங்களூரு குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி கர்நாடக மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துகள் ஜப்தி
கர்நாடக மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் வெங்கடேஷ், பெங்களூருவில் குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் குறித்து பிரச்சினை கிளப்பி பேசினார். அதற்கு கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் பதிலளிக்கையில் கூறியதாவது:-
குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வங்கியில் ரூ.1,294 கோடி முறைகேடு நடந்துள்ளதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. அதில் ரூ.712 கோடி அளவுக்கு முறைகேடு செய்தவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்துகளை மீட்க அசோகன் என்ற அதிகாரி ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐகோர்ட்டிலும் விசாரணை நடக்கிறது.
சட்ட நடவடிக்கை
அந்த கூட்டுறவு வங்கியை ஏற்று நடத்த 5 தேசிய வங்கிகள் முன்வந்துள்ளன. அதில் ஒரு வங்கியை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கும். ரூ.1,294 கோடியை ரிசர்வ் வங்கியால் தேர்வு செய்யப்படும் தேசிய வங்கி செலுத்தும். இந்த முறைகேடுகள் குறித்து 42 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எஸ்.டி.சோமசேகர் கூறினார்.
மந்திரியின் இந்த பதிலால் திருப்தி அடையாத உறுப்பினர் வெங்கடேஷ், அந்த கூட்டுறவு வங்கி முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது மீண்டும் பேசிய மந்திரி எஸ்.டி.சோமசேகர், "கூட்டுறவு வங்கி முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. இதை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தால் மேலும் காலதாமதமாகும். அதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவில்லை" என்றார்.
சி.பி.ஐ. விசாரணை
இதை நிராகரித்த உறுப்பினர் வெங்கடேஷ் மேல்-சபை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினார். அவருக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரசின் மற்ற உறுப்பினர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். குருராகவேந்திரா கூட்டுறவு வங்கி முறைகேடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.