காரில் கடத்திய ரூ.15 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது; 3 பேர் கைது
உடுப்பி டவுன் அருகே காரில் கடத்திய ரூ.15 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மங்களூரு;
போலீசார் சோதனை
உடுப்பி டவுன் பெர்தூர் அருகே ஹெப்ரியில் இருந்து ஜோகிபெட்டுவுக்கு காரில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக உடுப்பி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்துமாறு கையசைத்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த 3 பேர் இறங்கி தப்பி ஓட முயன்றனர். இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். மேலும் அவர்கள் வந்த காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் போதைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் 3 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
ரூ.15 லட்சம் போதைப்பொருட்கள்
அதில் அவர்கள் ஹெப்ரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 23), நிசேப் (24), நித்தேஷ் (24) ஆகியோர் என்பதும், ஜோகிபெட்டுவுக்கு காரில் போதைப்பொருட்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.