எச்சரிக்கையை மீறி பயிற்சி... குண்டு பாய்ந்து 3 யானைகள் பலி; வருத்தம் தெரிவித்த இந்திய ராணுவம்


எச்சரிக்கையை மீறி பயிற்சி... குண்டு பாய்ந்து 3 யானைகள் பலி; வருத்தம் தெரிவித்த இந்திய ராணுவம்
x

மேற்கு வங்காளத்தில் அரசின் எச்சரிக்கையை மீறி நடந்த பயிற்சியில் குண்டு பாய்ந்து 3 யானைகள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று இந்திய ராணுவம் வருத்தம் தெரிவித்து உள்ளது.


கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் இந்திய ராணுவம் போர் பயிற்சி செய்ய முடிவானது. எனினும், இந்த பகுதியில் வனவாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய ராணுவத்திடம் அரசு கேட்டு கொண்டது.

இதேபோன்று, மேற்கு வங்காள வன துறையும், வேறு இடத்தில் ராணுவ பயிற்சியை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தது. எனினும், துப்பாக்கி சுடுவது உள்ளிட்ட பயிற்சிகளை இந்திய ராணுவம் அந்த பகுதியில் மேற்கொண்டது.

இந்த நிலையில், வைகுந்தபுரம் வன பகுதியில் 3 யானைகள் உயிரிழந்து கிடந்தன. இந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனையில், யானையின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதனை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் மேற்கு வங்காள வன துறை அதிகாரிகள் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில், ராணுவ பயிற்சியில் குண்டு பாய்ந்து 3 யானைகள் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று இந்திய ராணுவம் வருத்தம் தெரிவித்து உள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை தவிர்க்க, எந்த பயிற்சிக்கும் முன்பும், ஆளில்லா விமான உதவியுடன் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்படும். தேவைப்பட்டால், அந்த பகுதியில் வன துறை ரோந்து பணி மேற்கொள்வதற்காக அவர்களின் உதவியும் கோரப்படும் என ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story