அசாமில் வெள்ளம்; தேசிய நெடுஞ்சாலையில் மீன்பிடிக்க வலைகளை வீசிய மக்கள்
அசாமில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மீன்பிடிக்க வலைகளை வீசியுள்ளனர்.
காம்ரூப்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் இடிந்தும், மரம் முறிந்து விழுந்தும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.
அசாம் முழுவதும் 2,930க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, துப்ரி, கம்ரூப், கோக்ராஜார், சோனித்பூர் மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பகலாடியா, புத்திமாரி, ஜியா பரலி, கோபிலி, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயஅளவை கடந்து ஓடுகிறது.
மொத்தம் 43 ஆயிரத்து 398 ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 25 மாவட்டங்களில் குறைந்தது 11 லட்சம் பேர் வெள்ள பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அசாமின் காம்ரூப் நகரில் ரங்கியா பகுதியில் மொரஞ்சனா என்ற இடத்தில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலையில் அந்த பகுதியில் வசிக்க கூடிய மக்கள் நீரில் இறங்கி மீன்பிடிக்க வலைகளை வீசி வருகின்றனர். ஒரு சிலர் அதனை வேடிக்கை பார்த்தனர். சிலர் வெள்ளநீரில் நின்றபடி, மொபைல்போனில் பேசியபடியே சென்றனர்.
வெள்ளம் சாலையில் சூழ்ந்த நிலையில், ஒருபுறம் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளன. அசாமில் வெள்ள பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 55 ஆக உயர்ந்து உள்ளது.