மராட்டியத்தில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை


மராட்டியத்தில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
x

மராட்டியத்தில் கனமழையை முன்னிட்டு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



புனே,



மராட்டியத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவகால மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நாசிக் நகருக்கு உட்பட்ட கோதாவரி ஆற்றின் கீழ் உள்ள பல்வேறு கோவில்கள் நேற்று நீரில் மூழ்கின.

மும்பையில் வருகிற 15ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதேபோல மும்பையையொட்டி உள்ள தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களிலும் மிக கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

அதே நேரத்தில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. எனினும் மழை காரணமாக மின்சார ரெயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரில் 40-50 கி.மீ. வேகத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது

மராட்டியத்தின் கோலாப்பூர், பால்கர், நாசிக், புனே மற்றும் ரத்னகிரி ஆகிய 5 மாவட்டங்களில் வருகிற 14ந்தேதி வரையில், பருவகால தொடர் மழையை முன்னிட்டு ரெட் அலார்ட் விடப்பட்டு உள்ளது. மும்பையில் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு உள்ளது.

மத்திய மராட்டியத்தில் ஜூலை 12ந்தேதி முதல் ஜூலை 14ந்தேதி வரை கனமழை முதல் தீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், சில சமயங்களில் 65 கி.மீ. வேகம் வரையும் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story