காஷ்மீர்: பள்ளியில் வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து துப்பாக்கி சூடு; பயங்கரவாதிகள் அட்டூழியம்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பள்ளி ஒன்றில் வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அனந்த்நாக்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடியிருந்தும், பணியாற்றியும் வருவது அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், பயங்கரவாதிகள் காஷ்மீரி பண்டிட்டுகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த ஆண்டில் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, வெளிமாநில மக்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் மீது தாக்குதல் தொடரும் என்றும் பயங்கரவாதிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் அனந்த்நாக் மாவட்டத்தில் போந்தியால்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று மாலை பயங்கரவாதிகள் அதிரடியாக புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலுக்கு, புலம்பெயர் தொழிலாளர்களான 2 பேர் இலக்காகி உள்ளனர். படுகாயம் அடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், மற்றொரு நபர் அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வந்தவர் என தெரிய வந்துள்ளது. இதனை காஷ்மீர் மண்டல போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளனர்.