மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை கடுமையாக தாக்கிய சந்திரசேகர ராவ்


மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை கடுமையாக தாக்கிய சந்திரசேகர ராவ்
x

மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


நான்டெட்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரியாக சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார். அவர், தனது கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

இதன்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி என்ற தனது கட்சி பெயரை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் பாரத ராஷ்டீரிய சமிதி கட்சி என பெயர் மாற்றம் செய்து, அறிவிப்பு வெளியிட்டு, தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதற்கான ஒப்புதலையும் பெற்று விட்டார்.

தேசிய அங்கீகாரம் கிடைத்ததும், ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடி கட்சி, இடதுசாரிகள் என பிற மாநில கட்சிகளின் தலைவர்களை கொண்ட முதல் மெகா பேரணியை கடந்த மாதம் கம்மம் நகரில் நடத்தினார். தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தேசிய கட்சியாக உருவாக அவரது கட்சியை ஸ்திரப்படுத்தி வருகிறார்.

கட்சியை விரிவுப்படுத்தும் முயற்சியாக, மராட்டியத்தின் நான்டெட் நகரில் நடந்த பொது பேரணியில் கலந்து கொண்டு சந்திரசேகர ராவ் பேசினார். அவர் பேசும்போது, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். பிரதமர் மோடி அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியாவாக மாறி விட்டது என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது. பா.ஜ.க. நாட்டை 16 ஆண்டு கால ஆட்சி செய்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் வரை இந்த இரு கட்சிகளே இந்தியாவை ஆட்சி செய்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் இவ்விரு கட்சிகளுமே பொறுப்பாவார்கள். அவர்கள் பேச்சு போட்டி நடத்துவதிலும், ஊழல் செய்வதில் மட்டுமே சுறுசுறுப்புடன் இயங்கியுள்ளனர் என அதிரடியாக தாக்கியுள்ளார்.

மேக் இன் இந்தியா பிரசாரம் ஒன்றும் சாதிக்கவில்லை. சீன பொருட்கள் இந்திய சந்தைகளில் தொடர்ந்து ஆக்கிரமித்து திணற செய்து வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெற்றிருக்கும் என்றால், நாட்டின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமங்களிலும் சைனா பஜார்கள் இருந்திருக்காது.

பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூலில் இருந்து, தீபாவளி பட்டாசுகள், ஹோலி பண்டிகைக்கான கலர் பொடிகள், விளக்குகள் மற்றும் விநாயகர் சிலைகள் வரை, அவ்வளவு ஏன் நமது மூவர்ண கொடி என ஒவ்வொரு பொருளும் சீனாவில் இருந்து வருகின்றன.

அப்படியென்றால், மேக் இன் இந்தியா திட்டம் எங்கே போனது? ஒவ்வோர் இடத்திலும் பாரத் பஜாருக்கு பதிலாக சைனா பஜார்கள் ஏன் உள்ளன? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story