பல நாட்களாக மாயம்; ஈம சடங்கின்போது திரும்பி வந்து ஆச்சரியம் ஏற்படுத்திய நபர்


பல நாட்களாக மாயம்; ஈம சடங்கின்போது திரும்பி வந்து ஆச்சரியம் ஏற்படுத்திய நபர்
x

திரிபுராவில் பல நாட்களாக காணாமல் போனவரின் ஈம சடங்குகள் நடந்தபோது உயிருடன் அவர் திரும்பி வந்தது ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.அகர்தலா,திரிபுராவின் மேற்கே மோகன்பூர் துணை மண்டலத்திற்கு உட்பட்ட காளிபஜார் பகுதியில் வசித்தவர் ஆகாஷ் சர்கார். கடந்த ஒரு மாதத்திற்கும் கூடுதலாக இவரை காணவில்லை.

இந்த நிலையில், கடந்த 3ந்தேதி மேற்கு அகர்தலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலர்மத் பகுதியருகே ஏரி ஒன்றில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார், ஆகாஷின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக ஆகாஷின் தந்தை பிரணாப் சர்கார் மருத்துவமனைக்கு சென்று, மகனின் கால் சட்டை, கணினி ஆகியவை அடங்கிய பையை பார்த்து உடலை அடையாளம் காட்டியுள்ளார்.

அதன்பின் பிரேத பரிசோதனை முடிந்து ஆகாஷின் உடலை பெற்று வீடு திரும்பியுள்ளார். ஆகாஷின் ஈம சடங்குகளை நடத்தி கொண்டிருந்தபோது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர் வந்து சேர்ந்துள்ளார்.

இதனால், சுற்றியிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்றொரு புறம் மகிழ்ச்சியும் அடைந்தனர். இதுபற்றி பிரணாப் கூறும்போது, ஏரியில் இருந்து கிடைத்த உடலுடன் காணாமல் போன எனது மகனின் தோற்றம் ஒத்து போகவில்லை என போலீசிடம் தொடர்ந்து கூறினேன்.

நீரில் மூழ்கியதில் உடல் வீக்கம் கண்டிருக்கும் என போலீசார் கூறினர். உடலுடன் கிடைத்த கால் சட்டைகள், கணினி ஆகியவை என்னுடைய மகனுடையதுதான். ஆனால், அந்த அளவுக்கு ஆரோக்கியமுடன் அவன் இருக்கவில்லை என கூறியுள்ளார்.

ஆகாஷ், பட்டாலா பாலத்தின் அருகே வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சகோதரிகளில் ஒருவரை பார்த்துள்ளார். அவர் விடுத்த அழைப்பினை ஏற்று வீடு திரும்பியுள்ளார். இதில் ஈம சடங்குகள் நடந்தது கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.


Next Story