நேரு, இந்திராவுக்கு இந்தியர்களின் திறமை மீது நம்பிக்கையே கிடையாது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு


நேரு, இந்திராவுக்கு இந்தியர்களின் திறமை மீது நம்பிக்கையே கிடையாது:  பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 5 Feb 2024 1:34 PM GMT (Updated: 5 Feb 2024 4:26 PM GMT)

காங்கிரஸ் கட்சியினர் எப்போதும், அவர்களையே ஆட்சியாளர்களாக நினைத்து கொண்டு, மக்களை சிறுமைப்படுத்தினர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இன்று உரையாற்றும்போது, இந்தியாவின் திறன் மீது ஒருபோதும் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை கொண்டது இல்லை. அவர்கள் எப்போதும், அவர்களையே ஆட்சியாளர்களாக நினைத்து கொண்டு, மக்களை சிறுமைப்படுத்தினர் என பேசியுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் இருந்து நேரு பேசியவற்றை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, ஐரோப்பியர்கள், சீனர்கள், ரஷியர்கள் மற்றும் அமெரிக்கர்களை போன்று நாம் கடுமையாக உழைக்கவில்லை. இந்த சமூகத்தினர் எல்லாம் சில மந்திர தந்திரங்களால், வளம் பெற்று விட்டனர் என்று நினைத்து விட வேண்டாம்.

கடின உழைப்பு மற்றும் நேர்த்தியான செயலால், அவர்கள் இந்த சாதனையை படைத்து உள்ளனர் என்று கூறினார். இது, இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் மூளையில்லாதவர்கள் என நேரு நினைத்துள்ளார் என வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் திறன் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பது தெரிகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இதற்கு விதிவிலக்காக ஒன்றும் நினைத்து விடவில்லை. அவர் செங்கோட்டையில் பேசும்போது, ஒரு நல்ல வேலை முடிவடைய உள்ள தருணத்தில், நாம் அதற்கு முன்பே மனநிறைவு பெற்றவர்களாக ஆகி விடுகிறோம். துரதிர்ஷ்டவசமாக இது, நம்முடைய பழக்கம் ஆக உள்ளது. இதேபோன்று, ஒரு தடங்கல் வரும்போது, நாம் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.

சில சமயங்களில், ஒட்டுமொத்த நாடும் தோல்வியை ஒப்பு கொண்டதுபோல் காணப்படுகிறது என பேசினார். இன்றைய காங்கிரசை பார்க்கும்போது, இந்திரா அவர்கள், நாட்டு மக்களை பற்றி தவறாக கணித்திருக்கலாம். ஆனால், காங்கிரசை பற்றி நன்றாக மதிப்பீடு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது என பிரதமர் பேசியுள்ளார்.

இதுவே, இந்தியர்களை பற்றி காங்கிரசை சேர்ந்த அரச குடும்பத்தின் நினைப்பாக இருந்தது என்று கூறிய அவர், நாட்டின் மீதும், மக்கள் மீதும் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.


Next Story