'மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' - சோனியா காந்தி


மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - சோனியா காந்தி
x

உடல்நிலை மற்றும் வயது உள்ளிட்ட காரணங்களால் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றைய தினம் அவர் தாக்கல் செய்தார். தற்போது சோனியா காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக உள்ள நிலையில், எதிர்வரும் தேர்தலில் ரேபரேலி மக்களவை தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் உடல்நிலை மற்றும் வயது உள்ளிட்ட காரணங்களால் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ரேபரேலி தொகுதி மக்களிடம் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று நான் இருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையுடன் கூறுவேன். உங்கள் நம்பிக்கையை காப்பதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறேன்.

இப்போது உடல்நலம் மற்றும் வயது பிரச்சினைகள் காரணமாக, எதிர்வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இந்த முடிவிற்குப் பிறகு நான் உங்களுக்கு நேரடியாக சேவை செய்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் என் இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடன் இருக்கும். கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் நீங்கள் எனக்கும் என் குடும்பத்திற்கும் ஆதரவாக நிற்பீர்கள் என்று எனக்குத் தெரியும்" என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.


Next Story