ஒடிசா முதல்-மந்திரியின் தனிச்செயலாளர் மீது மை வீசிய நபர் கைது
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மை வீசிய வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பூரி,
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே. பாண்டியன் உள்ளார். இந்த நிலையில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் வழிக்காட்டுதலின் பேரில் மக்களின் குறைகளை கேட்பதற்காக வி.கே.பாண்டியன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பூரி மாவட்டத்தில் உள்ள சத்யபாடி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று வி.கே.பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் வி.கே. பாண்டியன் மீது மை வீசினார். அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த பூரி மாவட்ட கலெக்டர் சம்ரத் வர்மா மீதும் மை வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மை வீசிய வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, வி.கே.பாண்டியன் மை வீசப்பட்ட வெள்ளை சட்டையுடன் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதனிடையே சத்யபாடி தொகுதியின் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ. உமகந்தா சமந்த்ரே, மை வீசிய நபர் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் வி.கே.பாண்டியனை குறிவைத்து மை வீசப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் பா.ஜ.க. இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.