நாடாளுமன்ற தேர்தல்; கேரளாவில் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டி
கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம்,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில், மக்களவை தேர்தலுக்கான போட்டியில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய அவர், கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும். கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. (ஜே.) மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளுக்கு தலா 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சமீபத்தில், இந்த முறை தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டு பெறுவோம் என கூறியிருந்தது. இந்த முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தது.
எனினும், இந்த விவகாரம் ஆலோசனை நடத்தி தீர்க்கப்பட்டு விட்டது என சதீசன் கூறினார். இதற்கு பதிலாக, ராஜ்யசபைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பழம்பெரும் தலைவரான முகமது பஷீர் மலப்புரம் தொகுதியில் இருந்தும், மக்களவை எம்.பி.யாக பதவி வகித்து வரும் அப்துல் சமது சமதனி பொன்னானி தொகுதியில் இருந்தும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரான பாலக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல், செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.