பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி..? முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த பா.ஜனதா


பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி..? முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த பா.ஜனதா
x

Image Courtacy: ANI

பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதாவை பொறுத்தவரை, எப்போதுமே மற்ற கட்சிகளுக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம்.

அந்தவகையில் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டம் நேற்று அதிகாலை 4 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது.

டெல்லி தீனதயாள் உபாத்யாயா ரோட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், யோகி ஆதித்யநாத், மோகன் யாதவ், பூபேந்திர பட்டேல், விஷ்ணு தியோசாய், புஷ்கர்சிங் தாமி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் போன்றோர் கலந்து கொண்டனர்.

விடிய விடிய நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் சிறப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொகுதிகளை கட்சித்தலைமை ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருந்தது.

இதைப்போல பிற மாநிலங்களிலும் கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்த தொகுதிகளில் யார், யாரை நிறுத்துவது? என்பதை கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் இறுதி செய்தனர்.

அதன்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதி கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பா.ஜனதா கைவசம் உள்ளது. பிரதமர் மோடி தொடர்ந்து 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 3-வது முறையும் இந்த தொகுதியில் இருந்தே வெற்றி பெற்று 3-வது முறை பிரதமர் ஆக கட்சியினர் ஏகமனதாக முடிவு எடுத்துள்ளனர்.

இதைப்போல உள்துறை மந்திரி அமித்ஷா இந்த முறையும் குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தொகுதி கடந்த 1989-ம் ஆண்டில் இருந்து பா.ஜனதா வசம் உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதைப்போல மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தொடர்ந்து 5 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் கூட்டணி முடிவாகாததால் அந்த மாநிலத்தில் போட்டியிடும் இடங்கள் பற்றி அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யலாம் என தலைவர்கள் முடிவு செய்ததாகவும் தெரிகிறது.


Next Story