ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி


ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி:  பிரதமர் மோடி
x

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று கொண்ட ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த, 42 வயதேயான, இந்து ஒருவர், இங்கிலாந்தின் இளம் பிரதமர் உள்ளிட்ட பெருமைகளை சுனக் பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை சந்தித்து பேசினார். இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், ரிஷி சுனக்கை இன்று தொடர்பு கொண்டு பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பதவியேற்று கொண்ட அவருக்கு வாழ்த்து கூறினேன்.

நம்முடைய விரிவான செயலாக்கத்திற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவற்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையிலான சுதந்திர வர்த்தக பேரம் விரைவாக முடிவுக்கு வருவது அவசியம் என இருவரும் ஒப்பு கொண்டோம் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலாக, எனது புதிய பணியை நான் தொடங்கிய தருணத்தில் கனிவான வார்த்தைகளை கூறியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இங்கிலாந்து மற்றும் இந்தியா பல விசயங்களை பரிமாறி கொண்டுள்ளது.

வரவுள்ள மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ன சாதிக்க முடியும் என்பது பற்றி அறிவதில் நான் உற்சாகமுடன் உள்ளேன் என டுவிட்டரில் சுனக் தெரிவித்து உள்ளார்.




Next Story