கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் - 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி, அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.