பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.. ரெயில்வே கிராசிங்கில் நடந்த பயங்கரம்


பஞ்சாப்: ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.. ரெயில்வே கிராசிங்கில் நடந்த பயங்கரம்
x

முன்விரோதம் காரணமாக ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் கோபி சோழா, இன்று கபூர்தலா மாவட்டத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். கோயிண்ட்வால் சாகிப் ரெயில்வே கிராசிங்கில் கேட் மூடப்பட்டிருந்ததால் காரில் காத்திருந்தார். அப்போது அவரது காரின் பின்னால் மற்றொரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மூன்று வாலிபர்கள், திடீரென குர்பிரீத் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சுல்தான்பூர் லோதி நீதிமன்றத்திற்கு சென்றபோது அவர் கொலை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குர்பிரீத் சிங் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தார். எனவே, முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்தில் விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. மன்ஜிந்தர் சிங் லால்புராவுக்கு நெருக்கமான குர்பிரீத் சிங், சோழா சாஹிப் வட்ட உணவு வழங்கல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story