ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்: வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு
மூன்று மக்களவை தொகுதிகள் காலியாக இருப்பதாக மக்களவை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக அவர் மீது சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் உடனடியாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவருக்கு ஜாமீனும் வழங்கி சூரத் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில், எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதிநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், ஜலந்தர், லட்சத்தீவு மற்றும் வயநாடு ஆகிய மக்களவை தொகுதிகள் காலியாக இருப்பதாக மக்களவை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் சவுத்ரி மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியாக உள்ளது. இதேபோல் லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசல், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் லட்சத்தீவு தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.