ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது - சிவசேனா கருத்து


ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது - சிவசேனா கருத்து
x

ராகுல் காந்தியின் பாதயாத்திரை பாஜகவுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் இந்த யாத்திரை குறித்து சிவசேனாவின் 'சாம்னா' பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. வேலையில்லாத திண்டாட்டம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் பிரச்சினைகள் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார். அவரின் கேள்வி பா.ஜனதாவின் வாயை மூடவைத்து உள்ளது.

எனவே அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், பா.ஜனதா ராகுல் அணிந்து இருக்கும் ஆடைகள் அல்லது அவர் சாப்பிடும் உணவு பற்றி விமர்சித்து வருகிறது. பா.ஜனதா ராகுல் காந்தியின் ஆடையை பற்றி விமர்சிக்காமல், அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

ராகுல் காந்தியின் யாத்திரை மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது பா.ஜனதாவுக்கு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம் நாட்டை அழித்து கொண்டு இருக்கிறது. இதற்கு வாரிசு ஆட்சி பரவாயில்லை என தோன்றுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரை நாட்டில் நிலவும் வெறுப்புணர்வு சூழலை சரிசெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவசேனா ஒரு காலத்தில் காங்கிரஸ், அதன் தலைமையை கடுமையாக விமர்சித்த கட்சி ஆகும். சமீப காலமாக அந்த கட்சி ராகுல்காந்தியை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story