கேரளாவில் தொடரும் கனமழை 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...!


கேரளாவில் தொடரும் கனமழை 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...!
x

ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு தவிர மாநிலத்தின் கோட்டயம்,எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரம்

கேரளாவில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அதிகன மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ள திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு தவிர மாநிலத்தின் கோட்டயம்,எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் 1-ம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. முதலில் லேசான அளவு மழை பெய்துவந்த நிலையில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கீழ் பெரியாறு, பொன்முடி, எரட்டையார், குந்தலா, பெரிங்கல்குத்து மற்றும் மூழியாறு ஆகிய 7 அணைகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் பம்பா, நெய்யாறு, கரமனை, மணிமலையாறு மற்றும் மீனாச்சல் ஆகிய ஐந்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மணிமலையாறு, நெய்யாறு, கரமனை ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்166 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 4639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கொச்சியில் அமைந்துள்ள பிரபல அலுவா மகாதேவ ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கோவிலைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தபடி செல்கிறது. அங்கு பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆற்றில் அதிகளவு வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

கேரளா, மகாத்மா காந்தி, காலடி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இன்று நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனுமம், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.


Next Story