சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.சி. நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.150 கோடி கருப்பு பணம்


சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.சி. நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.150 கோடி கருப்பு பணம்
x

உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.சி.யின் நிறுவனத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் கணக்கில் வராத ரூ.150 கோடி கருப்பு பணம் சிக்கியுள்ளது.



லக்னோ,



உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.சி.யாக இருந்தவர் ஷியாம் சுந்தர். கனராம் கட்டுமான நிறுவனம் என்ற பெயரில் பண்டில்கண்ட் நகரில் கோடிக்கணக்கான கட்டுமான பணிகளில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

உத்தர பிரதேசத்தில் உள்ள மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் கான்பூர், லக்னோ, ஜான்சி, டெல்லி மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் கடந்த 6 நாட்களாக வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், நிறுவனத்தின் ஆவண பதிவில் இல்லாத பெருமளவிலான சொத்துகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதன்படி ரூ.153 கோடி கருப்பு பணம், நிறுவன இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபோக ரூ.40 கோடிக்கு பினாமி சொத்துகளும் கண்டறியப்பட்டு உள்ளன.

அவற்றிற்கு அந்நிறுவனம் வரி செலுத்த வேண்டும். இதுதவிர, ரூ.250 கோடிக்கு பணபரிமாற்றம் நடந்ததற்கான சான்றுகளையும் ஐ.டி. துறை கண்டறிந்து உள்ளது. தவிர, நாடு முழுவதும் ரூ.300-400 கோடி மதிப்பிலான நில ஆவணங்களும் சோதனையில் கண்டறியப்பட்டு உள்ளன.

சோதனை பற்றி தகவல் தெரிந்ததும், நிறுவனத்தின் சி.ஏ. காலையில் நடைபயிற்சிக்கு சென்றவர், வீட்டுக்கு திரும்பி வராமல் அப்படியே, லக்னோ வழியே டெல்லிக்கு தப்பியுள்ளார். பலமுறை அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.

இதனால், அதிகாரிகள் கட்டிடத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையை நடத்தியுள்ளனர். அந்த நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக சி.ஏ. இருந்துள்ளார். மறைமுக பணபரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றிலும் அவருக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.


Next Story