திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை 5 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபர்; போலீஸ் வலைவீச்சு
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து 5 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா;
5 முறை கர்ப்பம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அருகே உள்ள கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் தரிகெரே தாலுகா கரகுச்சி கிராமத்தை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். மேலும் சச்சின், இளம்பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் 5 முறை கர்ப்பமாகி உள்ளார்.
வாலிபருக்கு வலைவீச்சு
இதையடுத்து சச்சின், அந்த கருவை கலைக்க வைத்துள்ளார். மேலும் இதுபற்றி வெளிேய யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுபற்றி அறிந்ததும், சச்சினின் பெற்றோரும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். மேலும் சச்சின், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இளம்பெண் பத்ராவதியை சேர்ந்த தலித் அமைப்பினருடன் பத்ராவதி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதில், காதலித்து உல்லாசம் அனுபவித்து திருமணத்துக்கு சச்சின் மறுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சச்சின் தலைமறைவானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சினை வலைவீசி தேடி வருகிறார்கள்.