உத்தரகாண்டில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு


உத்தரகாண்டில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு
x

உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதி தூய்மை திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தில் மின்சாரம் தாக்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சமோலி,

இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கங்கையின் துணை ஆறுகளும் தூய்மைப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டம் வழியாக பாயும் அலக்நந்தா நதிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

எனவே போலீசார் நேற்று காலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் ஏராளமான பொதுமக்களும் கூடியிருந்தனர். அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் ஒன்று திடீரென வெடித்து மின்கம்பி அறுந்து விழுந்தது. இது உலோக தகடு ஒன்றின் மீது விழுந்ததால் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, அங்கிருந்த ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பலர் அங்கேயே உடல் கருகினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தகவல் அறிந்து உயர் அதிகாரிகளும், தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்த 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மின்சார விபத்தில் சம்பவ இடத்திலும், ஆஸ்பத்திரிகளிலுமாக 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 3 பேர் ஊர்க்காவல் படை வீரர்கள் ஆவர். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும் அறிவித்த அவர், சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உத்தரகாண்டில் கங்கை நதி தூய்மை திட்ட பணியிடத்தில் மின்சாரம் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story