தெலுங்கானா, ஆந்திராவில் வீடு புகுந்து தொடர் கொள்ளை: 4 பேர் கைது; ரூ.2.5 கோடி நகைகள் பறிமுதல்


தெலுங்கானா, ஆந்திராவில் வீடு புகுந்து தொடர் கொள்ளை:  4 பேர் கைது; ரூ.2.5 கோடி நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sep 2023 3:39 AM GMT (Updated: 14 Sep 2023 8:42 AM GMT)

தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என பல மாநிலங்களில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, ரூ.2.5 கோடி மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா என பல மாநிலங்களில் வீடு புகுந்து தொடர் கொள்ளையில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதேபோன்று, வாரங்கால் பகுதியில் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில், கொள்ளையர்கள் 4 பேரை வாரங்கால் நகர போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுபற்றி வாரங்கால் காவல் ஆணையாளர் ரங்கநாத் கூறும்போது, வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட கூடிய 4 பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட கூடியவர்கள். நீண்டகாலம் இந்த தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள்.

32 வழக்குகளில் தொடர்புடைய இவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து ரூ.2.5 கோடிக்கும் கூடுதலான மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

2.38 கிலோ தங்கம், 4 மொபைல் போன்கள், ஒரு கார், ரூ.5.2 லட்சம் மதிப்பிலான 14 கஞ்சா பொட்டலங்கள், 4 போலி ஆதார் கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இவை தவிர, பிரான்சில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதை பொருட்களையும் கைப்பற்றி உள்ளோம்.

இவர்கள் 4 பேரும் வாரங்கால், அடிலாபாத், பெங்களூரு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் பிற இடங்களிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தவர்களான அவர்கள் அக்பர் குரேஷி 34, கபில் ஜாதாவோ 30, முகமது ஷெரீப் 56 மற்றும் முகமது ஜாத் கான் 25 என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.


Next Story