ஊழல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட தயாரா?; சித்தராமையா சவால்


ஊழல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட தயாரா?; சித்தராமையா சவால்
x

எனது ஆட்சி காலம் முதல் இதுவரை நடந்த ஊழல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

துமகூரு:

எனது ஆட்சி காலம் முதல் இதுவரை நடந்த ஊழல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

மக்களின் ஆதரவு

காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

பெங்களூருவில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் தான் துமகூரு உள்ளது. ஆனால் எதிர்பார்த்த வளர்ச்சியை இந்த பகுதி அடையவில்லை. நஞ்சுண்டப்பா அறிக்கைப்படி துமகூருவில் மொத்தம் உள்ள 10 தாலுகாக்களில் 8 தாலுகாக்கள் பின்தங்கியவை. பா.ஜனதா மக்களின் ஆதரவு பெற்று ஆட்சிக்கு வரவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி குறுக்கு வாசல் வழியாக அவர்கள் ஆட்சியை பிடித்தனர்.

அதிகாரத்தை கொடுத்தோம்

மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்று கருதி ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கினோம். அதனால் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார். குமாரசாமி தனது கட்சியை மதசார்பற்ற கட்சி என்று சொல்கிறார். அப்படி என்றால் கடந்த 2006-ம் ஆண்டு தரம்சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை குமாரசாமி வாபஸ் பெற்று பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். இதை என்னவென்று அழைப்பது?.

நாங்கள் குமாரசாமிக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தோம். அதை அவரால் காப்பாற்றி கொள்ள முடியவில்லை. இப்போது, கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கு சித்தராமையா தான் காரணம் என்று சொல்கிறார். பா.ஜனதாவுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பா.ஜனதா கட்சி, சிறுபான்மையின மக்களை வெளிப்படையாக எதிர்க்கிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியோ, அந்த மக்களை ரகசியமாக எதிர்க்கிறது. இத்தகையவர்களின் பேச்சை நம்பி சிறுபான்மையின மக்கள் ஏமாற கூடாது.

ரூ.153 லட்சம் கோடி கடன்

நாட்டின் கடன் ரூ.153 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். மதவாத கட்சியான பா.ஜனதா, சமூகங்களை உடைக்கும் பணியை செய்கிறது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் ஊழல் தாண்டவமாடுகிறது. எனது ஆட்சியில் ஊழல் நடந்ததாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். அப்படி என்றால் எனது ஆட்சி காலம் உள்பட இதுவரை நடைபெற்ற ஊழல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட இந்த அரசு தயாரா?. இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story